தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிச.13-க்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் கெடு

SC directs TN state EC to declare the local body elections before Dec 13 டெல்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 13-ந் தேதிக்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பு உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு பல முறை உச்சநீதிமன்றம் அவகாசம் தந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான பெஞ்ச் முன்பாக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்ட்டு வருகின்றன. ஆகையால் டிசம்பர் 2வது வாரம் வரை கால அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் டிசம்பர் 13-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை டிசம்பர் 13-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Comments