அயோத்தி நில உரிமை வழக்கு: நவ.13-ல் தீர்ப்பு வழங்குகிறார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

Ayodhya verdict date: CJI may deliver judgment after Nov 13 டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 13-ந் தேதி தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லா, நிர்மோனி அகாடா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து தாம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இவ்வழக்கில் அவர் தீர்ப்பு வழங்க உள்ளார். இத்தீர்ப்பு வழங்கப்படுவதால் உத்தப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து அம்மாநில தலைமை செயலாளருடன் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆலோசனை நடத்துகிறார்.

அயோத்தி வழக்கில் நவம்பர் 13 அல்லது 15-ந் தேதிக்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு ஆகியவற்றிலும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தாம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தம் வசமுள்ள முக்கியமான வழக்குகளை அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் எஸ்.ஏ. போப்டேவிடம் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று ஒப்படைத்திருக்கிறார்.

Comments