
தீர்ப்பிற்கு முன்னதாக கோயில் நகரமான அயோத்தி முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு, 4,000 துணை ராணுவ வீரர்களை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் துணை ராணுவப் படைகளின் கம்பெனிகள் மற்றும் உத்தரபிரதேச காவல்துறையின் ஆயுதக் கான்ஸ்டாபுலரி (பிஏசி) உள்ளிட்ட பல படை பிரிவுகள் அயோத்தி அனுப்பி வைக்கப்படும்.
அதேநேரம், இப்போதைக்கு, அயோத்தியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கவோ அல்லது பள்ளிகள் அல்லது கல்லூரிகளுக்கு லீவு தரவோ எந்த திட்டமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை நவம்பர் 17ம் தேதிக்கு முன் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 17ம் தேதியோடு, வழக்கை விசாரித்த அமர்வில் இருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெறுவார். அயோத்தியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரபிரதேச காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ரேங்க் அதிகாரி ஒருவர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்கள், வகுப்புவாத கலவரங்கள், பொதுமக்களிடையே மோதல், சர்ச்சைக்குரிய இடத்திற்கு ஏதேனும் ஆபத்து மற்றும் சந்தேகிக்கப்படும் அனைத்து வகை பிரச்சினைகளையும் சமாளிக்க தயாராக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கலவரம் வந்தால் அடக்குவது எப்படி என்பது தொடர்பான, கலவர எதிர்ப்பு பயிற்சியை உத்தரபிரதேச காவல்துறை ஏற்பாடு செய்தது. இதில் போலீசார் பங்கேற்றனர். அயோத்தி நகரம் மற்றும் மாவட்டத்தில் டிசம்பர் இறுதி வரை நான்குக்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களில் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கான எந்தவொரு முயற்சியிலும் யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
Comments