
பொருளாதார மந்த நிலை, வங்கிகளில் வாராக் கடன் பிரச்னை, கடன் கொடுக்க பணம் இல்லாத வங்கிகள் அல்லது பணம் இருந்தும் சரியான நபரை கண்டு பிடித்து கடன் கொடுக்காத வங்கிகள், தேவை சரிவு, உற்பத்தி சரிவால் வேலை இழப்பு, வேலையில் இருப்பவர்களுக்கும் வேலை இல்லா நாட்கள் அறிவித்து சம்பளம் குறைவது, நிறுவனங்களுக்கு இருக்கும் நிதி சிக்கல்கள், நிறுவனங்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் சிக்கல்கள்... என பட்டியல் நீள்கிறது.
இப்போது இந்திய வங்கிகள் எளிதில் மூடப்படலாம் என தொண்டை தண்ணீர் வத்திப் போகும் அளவுக்கு ஆதாரங்களுடன் கத்தி இருக்கிறது மூடீஸ் (Moody's) என்கிற சர்வதேச ரேட்டிங் நிறுவனம்.
இந்திய நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை, வர்த்தகப் பிரச்னைகள், பற்றாக்குறைக்கு அமெரிக்க சீன வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் இந்தியாவில் இருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளால் தங்கள் வியாபாரத்தை சரியாகச் செய்ய முடியவில்லை. இதனால் இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் வருமானம் குறைந்து, கம்பெனிகள் வாங்கி இருக்கும் கடன்களையும் ஒழுங்காக திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள் என மூடீஸ் நிறுவனமே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி தங்கள் வியாபாரத்தை பார்த்து வந்த கார்ப்பரேட் நிறுவனங்களால், வாங்கிய கடன்களுக்கு ஒழுங்காக வட்டியைக் கட்ட முடியவில்லை என்றால் வங்கி எப்படி செயல்படும்..?அதோடு இந்திய வங்கிகளின் முதல் விகிதங்கள் (Capital Ratios) மிகவும் குறைவாகவே இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் கடன்களை ஒழுங்காகச் செலுத்த வில்லை என்றால் இந்திய வங்கிகள் வைத்திருக்கும் இந்த முதலீடுகள் (Capital) எல்லாம் மொத்தமும் காலியாகி விடும் எனவும் விளக்கி இருக்கிறது.
அப்படி ஒருவேளை வங்கியின் முதல் தொகை எல்லாம் காலி ஆகிவிட்டால், அது ஒட்டு மொத்த வங்கியும் திவால் ஆனதற்குத் தானே சமம். கையில் முதல் தொகை இல்லாத வங்கி பிறகு யாருக்கு கடன் கொடுக்கும்..? எனவே இந்திய வங்கிகள் எளிதில் திவால் ஆக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும், குறிப்பாக வங்கி டெபாசிட்டுகளில் பணம் போட்டிருக்கும் நம்மையும் பலமாக எச்சரித்து இருக்கிறது மூடிஸ்.
அதோடு இந்தியாவில் கார்ப்பரேட் கடன் மற்றும் ஜிடிபிக்கு இடையிலான விகிதம் (Corporate Debt to GDP ratio) குறைவாகவே இருக்கிறது. ஆனால் வங்கிகள் கடன் கொடுத்திருப்பதைப் பார்த்தால், அதிக கடன்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே கொடுத்து இருக்கிறார்கள் எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறது மூடீஸ். அதுவும் Interest Coverage Ratio குறைவாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே கடன் கொடுத்து இருக்கிறார்களாம். அதாவது வாங்கிய கடனுக்கு வட்டி மட்டுமே செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து இருக்கிறார்களாம். வட்டி மட்டுமே செலுத்தினால் அசல் எப்போது செலுத்துவார்கள்..?
கடந்த 2011-ம் ஆண்டில் இருந்தே, இந்திய வங்கிகள் இதே போல Interest Coverage Ratio குறைவாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே கடன் கொடுத்த சிக்கலினால், நிறைய வாரா கடன்கள் எழுதப்பட்டு, வங்கியின் நிதி நிலையை மோசமாக்கியது. இப்படி இந்திய வங்கிகள் ஈட்டும் (EBITDA) வருமானத்தில் சுமார் 25 சதவிகிதம் இழப்பு ஏற்படும் எனவும் கணித்துச் சொல்லி இருக்கிறது மூடீஸ்.
இந்தியாவில் மின்சாரம் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்ற துறைகள் அதிக அழுத்தம் உள்ள துறைகளாக இருக்கின்றன. இந்த துறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், அனுமதிகள் கிடைக்க தாமதமாவது போன்றைகளால் திட்டத்தை குறிப்பிட்ட கடன் தொகைக்குள் முடிக்க முடியாமல் அதிகம் செலவாகிறது. இதனால் வாங்கும் கடன்கள் அதிகரித்து கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள் என விளக்குகிறது மூடீஸ்.
மேலே சொன்னவைகளுக்கு மாறாக கடந்த சில ஆண்டுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள், தாங்கள் வாங்கிய கடன்களை அடைக்கவும் செய்திருக்கிறார்கள். வங்கிகளும், அதிக கடன் கொடுத்து இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பட்டியல் போட்டு வாராக் கடன்களாக அடையாளம் கண்டு கொண்டார்கள். இருப்பினும் இந்திய வங்கிகள் இந்த நொடி வரை எளிதில் திவால் ஆகக் கூடிய சூழ் நிலையில் இருக்கிறது என்பதை மூடீஸ் அழுத்தமாகச் சொல்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்..? அரசு என்ன செய்யப் போகிறது..? தெரியவில்லை.
Comments