
வாக்குப்பதிவு நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சார்ந்தவர்களின் நடமாட்டத்தை தடுக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் காவல்துறையினரின் உதவியோடு ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், மக்களவை உறுப்பினர் திரு. எச். வசந்தகுமார் அவர்கள் பாளையங்கோட்டையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி தமது தொகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது, நாங்குநேரி தொகுதி வழியாக சென்றுள்ளார்.
காவல்துறையினர் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி, ‘நீங்கள் இந்த வழியாக செல்லக் கூடாது வேறு வழியாக செல்லுங்கள்" என்று கூறிய பிறகு அவர்கள் சொன்னபடி பயணம் மேற்கொண்ட போது, மீண்டும் அவரை இடைமறித்து நாங்குநேரி காவல் நிலையத்திற்கு விசாரணை என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு உள்ள அடிப்படை உரிமையை கூட மறுக்கிற வகையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக நாங்குநேரி காவல் நிலையத்தில் விசாரணை என்ற போர்வையில் வைத்திருக்கின்றனர். இத்தகைய ஜனநாயகப் படுகொலையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களவை உறுப்பினருக்கு இருக்கிற ஜனநாயக உரிமைகளின் அடிப்படையில் தமது தொகுதிக்கு பயணம் மேற்கொண்ட திரு. எச். வசந்தகுமார் அவர்களை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதை உணர்ந்த அ.தி.மு.க.வினர், தேர்தல் நாளன்று பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.
தோல்வி நடுக்கத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் காவல்துறை மூலமாக ஈடுபட்டுள்ள இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நாங்குநேரி சட்டமன்ற வாக்காளப் பெருமக்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு அமோக ஆதரவு அளிப்பதன் மூலம் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
Comments