எந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்குத்தான் ஓட்டு விழும்… பாஜக எம்எல்ஏ பகீர்… ராகுல் ட்விட்

நாடு முழுவதும் இதுவரை மக்கள் மத்தியில் வாய்மொழி உரையாடலாக பரவி வந்த ஓர் குற்றச்சாட்டுதான் அது. ஆனால், நீறு பூத்த நெருப்பைப் போல இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடக் கூடி பயங்கரத்தை உள்ளடக்கிய சந்தேகமாகவும் அது இருந்தது.


மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் அது பாஜகவுக்கு விழும்படி செய்திருப்பதே அக்கட்சியின் இத்தகைய அபரிமிதமான வெற்றிக்குக் காரணம் என்ற பேச்சுதான் அது.

அது வெறும் பேச்சோ, வதந்தியோ மட்டுமல்ல… அச்சுறுத்தும் பயங்கரத்தின் அசலான உண்மை என உறுதிப்படுத்துவது போல் தற்போது பேசி இருக்கிறார் ஹரியானாவில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக எம்எல்ஏவாக இருந்து வரும் ஒருவர். 

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி தளமும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக எம்எல்ஏ பக்சிஷ் சிங் விர்க் என்பவர் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் ‘பாஜகவின் மிக நேர்மையான மனிதர் – The most honest man in the BJP’ என அந்தப் பதிவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஹரியானா மாநிலம், அசந்த் தொகுதியின் தற்போதைய எம்எல்வான பக்சிஷ் சிங் விர்க் பஞ்சாபி மொழியில் பேசி இருப்பது இதுதான்..

“நீங்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறீர்கள் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியும். பிரதமர் மோடியும் ஹரியானா பிரதமர் மனோகர் லால் கட்டாரியாவும் மிகவும் திறமைசாலிகள். நீங்கள் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் அந்த வாக்கு பாஜகவுக்கு விழும்படி இயந்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது”

இது யாரோ ஒரு சாமானியர் கூறிய வார்த்தைகள் அல்ல. பாஜகவைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை எம்எல்ஏ பதவியில் இருந்து வரும் ஒரு பொறுப்புள்ள நபரின் பேச்சு. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

“யாருக்கு நீங்கள் ஓட்டளித்தாலும் அது பாஜவுக்கு விழும்படி வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியமைத்த பின்னர் எத்தனை தேர்தல் வந்தாலும் அதில் பாஜகதானே வெற்றி பெறும்” என்று சில எதிர்க்கட்சிகள் பேசி வந்த கருத்து, இப்போது உண்மையாக இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.

கேள்விக்குறியாக உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை இன்மை குறித்து காங்கிரஸ் உட்பட வேறு எந்த எதிர்க்கட்சியும் ஏன் குரல் எழுப்பவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து அவ்வப்போது கேள்வி எழவும் செய்கிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெற வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்த போதிலும், அதனை ஏற்று நிரூபிக்க எந்த அரசியல் கட்சியும் முன்வராததால், அந்தக் குற்றச்சாட்டு குறித்த பேச்சும் மெல்ல அடங்கத் தொடங்கியது.

தற்போது ஆளும் கட்சி பிரமுகர் அதுவும் எம்எல்ஏவாக இருக்கும் ஒருவரே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு சாதகமான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடக் கூறியுள்ளார். இதனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பகத் தன்மை அடியோடு ஆட்டம் காணத் தொடங்கி இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் இனியும் இந்தப் பிரச்சனையை மென்மையாகவே அணுகிக் கொண்டிருந்தால், இந்திய ஜனநாயகமும் சத்தமே இல்லாமல், அதை விட மென்மையாக கொன்று குழி தோண்டி புதைக்கப்படும் என எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தை எழுப்பிய போது காங்கிரஸ் கூட அதைக் கண்டு கொள்ளவில்லை. தற்போது ராகுல் காந்தியே அதனை அம்பலப் படுத்தி இருக்கிறார்.

நிச்சயமாக பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது உறுதி. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள்தான் இந்த விவகாரத்தை கையிலெடுத்து போராட வேண்டும்” எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“மோடியையும், பாஜக அரசையும் வெறுமனே விமர்சிப்பதால் மட்டும் இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றி விட முடியாது. மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்புவது மட்டுமே இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற ஒரே வழி” என்ற அரசியல் விமர்சகர்களின் கருத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை.

இனியேனும் எதிர்க்கட்சிகள் விழித்துக் கொள்ளுமா?

Comments