
ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இன்றைக்கு எங்கு பார்த்தாலும், குடத்தைத் தூக்கிக்கொண்டு, சாலைகளில் சாலைமறியலில் ஈடுபடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் இந்த குடிநீர்ப் பிரச்சினைதான். அதற்குக் காரணம்; கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி என்ன செய்தது, குளங்களைத் தூர்வாரியதா? அல்லது முறையாகத் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததா? குளங்களைச் சுத்தப்படுத்த முயன்றாலும், அதில் டெண்டர் விட்டு, கமிசன் எப்படி அடிக்கலாம் என்பதில்தான் குறியாய் இருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அதேபோன்று, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தோம். சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். பெண்களின் முன்னேற்றத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலத்தில் ஏராளமான நன்மைகளை நாம் செய்து கொடுத்தோம். ஆனால், இன்றைக்கு உங்களால் வங்கிகளுக்குச் சென்று வட்டியில்லாக் கடனை வாங்க முடிகிறதா? சுழல்நிதி உங்களுக்கு வந்து சேருகிறதா என்றால், கிடையாது!
தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால், அவர்கள் கட்சி தோற்றுவிடும் என்று காரணத்தினால், அதனை நடத்த முன்வரவில்லை. ஆனால் அந்த தோல்வி பயத்தை மறைக்க, தேர்தல் நடத்தவிடாமல் தி.மு.க தான் வழக்குத் தொடுத்தது என்று அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லுகிறார்கள். தி.மு.க வழக்குத் தொடுத்தது என்றால், முறையாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தோம்.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். மத்தியில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு அடிமையாக இங்கே இருக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Comments