நாளை ஆபீஸ் வர வேண்டாம்.. வீட்டிலிருந்தே வேலை பாருங்க.. சென்னை ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

China President visit: IT companies in Chennai asking their employees to do work from home சென்னை: பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் வருகையையொட்டி, சென்னை ஓஎம்ஆர் சாலையியிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை நாளை, வீட்டிலிருந்தே பணியாற்ற கேட்டுக்கொண்டுள்ளன. மகாபலிபுரத்தில் இரு தலைவர்களும் நாளை மாலை சந்திப்பு நிகழ்த்த உள்ளனர். நாளை மறுநாள் மதியம் வரை இந்த சந்திப்பு மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இதையொட்டி நாளை மதியம் இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து மாமல்லபுரம் கிளம்பிச் செல்கிறார்கள். இதையொட்டி ஓஎம்ஆர் சாலை, கிண்டி உள்ளிட்ட தெற்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தெற்கு சென்னை பகுதியில்தான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் குவிந்து உள்ளன. இந்த நிலையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. அலுவலகம் வரும் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெருக்கடி பிரச்சினையை சமாளிப்பதற்காகவும், பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்து நிம்மதியாக பணியாற்றும் சூழல் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பல ஐடி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளன. சீன அதிபர் மாமல்லபுரத்திற்கும் சென்னைக்கும் 2 நாட்களுமே தனது காரில் சென்றுவர உள்ளார். இதனால்தான், சென்னையில், போக்குவரத்து நெரிசல்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பது தெரிகிறது. ஏற்கனவே சில ஐடி நிறுவனங்களின், நிர்வாகிகளுடன் சென்னை மாநகர காவல் துறையினர் இது தொடர்பாக ஆலோசனைகளையும் நடத்தியுள்ளனர். இதேபோல ஓஎம்ஆர் சாலை பகுதியில் உள்ள சில திரையரங்குகளிலும், மாமல்லபுரத்திலுள்ள திரையரங்குகளிலும் நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்துவிட்டதால், இன்று மாலை கிண்டி, மத்திய கைலாஷ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

Comments