கீழடி ஆய்வுக்கு நிலம் கொடுத்த மூதாட்டி... வைகோ நேரில் சந்தித்து பாராட்டு

Vaiko meet to muthlakshmi who provided the land for the keeladi excavation சென்னை: கீழடி ஆய்வுக்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்கிய முத்துலட்சுமி என்ற மூதாட்டியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் பாராட்டும் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை காண்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்றிருந்தார். அங்கு அவருக்கு மதுரை எம்.பி.யும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அகழாய்வு பணிகள் குறித்தும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றியும் விளக்கினார். மேலும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பி. தியாகராஜனும் வைகோவுடன் கீழடி வந்திருந்தார்.

ஆய்வுப்பணிகளை பார்த்துவிட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிலில் வைகோ அமர்ந்திருந்த போது, ஆய்வுக்காக 5 ஏக்கர் தென்னந்தோப்பை கொடுத்த முத்துலட்சுமியை கட்சிக்காரர்கள் வைகோவிடம் அழைத்து வந்தனர். முத்துலட்சுமியை கண்டதும் எழுந்து நின்று வணங்கி வரவேற்ற வைகோ, அவருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், இந்தக்காலத்தில் 5 ஏக்கர் நிலத்தை இப்படி அகழாய்வு செய்துகொள்ளுங்கள் என கொடுப்பதற்கு முதலில் மனம் வேண்டும் என சிலாகித்தார் வைகோ. முத்துலட்சுமியோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அகழாய்வில் தன்னுடைய பங்கும் இருப்பது தனக்கு பெருமை என பெருந்தன்மையோடு கூறினார்.

இதனிடையே நான்காம் கட்ட ஆய்வறிக்கை வெளியானதை அடுத்து, முன்பை விட நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் கீழடிக்கு வந்து அகழாய்வு நடைபெறும் இடங்களை ஆர்வத்துடன் பார்த்துச்செல்வது குறிப்பிடத்தக்கது. மதுரையில் இருந்து 12 கி.மீ. தொலைவு மட்டுமே என்பதால், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூட பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

Comments