
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார்.
இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதில் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்த விடுவித்தது. ஆனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.
இதன்படி 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நன்னடத்தை விதிகள் மூலம் சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சசிகலா தண்டனை காலம் முழுவதையும் அனுபவித்த பிறகே விடுதலை ஆவார் என்றும் சிறை நன்னடத்தை விதிமுறைகள் சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் கர்நாடக சிறைத்துறை இயக்குனர் என்.எஸ்.மெக்ரிக் கூறியுள்ளார்.
சசிகலா விரைவில் விடுதலை ஆகி வருவார் என எதிர்பார்த்த அமமுகவினர் வருத்தம் அடைந்துள்ளனர். தற்போது முழு தண்டனை காலத்தையும் சசிகலா அனுபவித்துவிட்டு வருவதாக இருந்தால் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் வெளியே வர முடியும். எனவே அதுவரை வெளிவரும் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
Comments