இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக இந்தியா அதிகப்படியான தொகையை செலவு செய்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இவ்விரு பிரச்னைகளுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளது.

மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்கள் மத்தியில் இந்த அறிவிப்புகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

எனவே இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசு தவிர, பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரமாக உள்ளன. இதற்காக ஒரு சில மாநில அரசுகள் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகன கொள்கையை உருவாக்கி வெளியிட்டுள்ளன.

இதில், அந்தந்த மாநிலங்களில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என தனித்தனியே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மின்சார வாகன கொள்கையை வெளியிட்டுள்ளன. இதில், தமிழக அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் யூனியன் பிரதேசமான சண்டிகரும் தற்போது வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் வாகன அடர்த்தி மிகுந்த நகரங்களில் சண்டிகரும் ஒன்று. சண்டிகரில் தோராயமாக 12 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, சண்டிகர் காற்றின் தரத்தை வெகுவாக பாதிப்படைய செய்கிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதில் சண்டிகர் நிர்வாகம் ஆர்வமாக உள்ளது.

உலகின் மிக தூய்மையான நகரங்களில் ஒன்றாக சண்டிகர் உருவெடுக்க வேண்டும் என அதன் நிர்வாகம் விரும்புகிறது. மேலும் மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிலும் சண்டிகர் தலைசிறந்து விளங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எட்டுவதற்காக வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு சண்டிகரில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். அதேபோல் வரும் 2030ம் ஆண்டிற்குள் 1,000 பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜர்களை இன்ஸ்டால் செய்யும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இதுதவிர மானிய திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

இதன்படி எலெக்ட்ரிக் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குபவர்கள் நேரடி மானியம் 20,000 ரூபாயை பெறுவார்கள். ஆனால் இது முதல் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும். அதே நேரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வரும் 2024ம் ஆண்டு வரை, பதிவு கட்டணங்கள் மற்றும் சாலை வரி ஆகியவற்றில் இருந்து 100 சதவீதம் விலக்கு வழங்கப்படும்.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு (முதல் ஆயிரம் பேருக்கு) 1 ஆண்டுக்கான இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படும். மேலும் அரசுக்கு சொந்தமான அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் மின்சார வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்வதற்கு வசதியாக இடங்களை ஒதுக்கும் திட்டமும் இந்த வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் வீடுகளில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை இன்ஸ்டால் செய்பவர்களுக்கு 30 சதவீத மானியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சண்டிகரில் எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அமல்படுத்தும் பொறுப்பு சண்டிகர் போக்குவரத்து துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அமல்படுத்தும் விதமாக, கமிட்டி ஒன்றை போக்குவரத்து துறை அமைக்கவுள்ளது. இந்த கொள்கையை எப்படி அமல்படுத்துவது? என்பது தொடர்பான பரிந்துரைகளை இந்த கமிட்டி வழங்கும்.

சண்டிகர் தற்போதுதான் வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையை உருவாக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகன கொள்கையை வெளியிட்டு விட்டது. இதில், பல்வேறு சலுகைகள், அதிரடி திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு ஆரம்பத்தில் சற்று பின்தங்கியிருந்தது.

இத்தனைக்கும் 'ஆசியாவின் டெட்ராய்டு' என வர்ணிக்கப்படும் சென்னையை தன்னகத்தே கொண்டிருப்பது தமிழகம்தான். சென்னை நகரை சுற்றி, இந்தியா மற்றும் உலகின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவேதான் 'ஆசியாவின் டெட்ராய்டு' என்ற அடைமொழியை சென்னை பெற்றுள்ளது.

இருந்தபோதும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க தேவையான பெரிய அளவிலான அறிவிப்புகள் எதையும் தமிழக அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த குறைகள் அனைத்தையும் தமிழக அரசு தற்போது போக்கியுள்ளது. ஆம், எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை கடந்த செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் சில முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன்படி வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும்.

இதுதவிர தமிழக அரசின் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையில், மற்றொரு முக்கியமான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக அளிக்கப்படவுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்கள் மத்தியில், இந்த அறிவிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையால், தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments