கீழடி அகழாய்வு மையத்தை பார்வையிட அனுமதி நிறைவு..!

கீழடி 5-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அகழாய்வு நடந்த பகுதியை பார்வையிடுவதற்கான நாட்களை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஜூன் 13ஆம் தேதி 47 லட்ச ரூபாயில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. கடந்த நான்கு கட்ட அகழாய்விலும் 12 மீட்டர் ஆழத்திற்கு பின்தான் பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் 5-ம் கட்ட அகழாய்வில் 5 மீட்டர் ஆழத்திலேயே மண் ஓடுகள், மண் பானைகள் செங்கல் கட்டுமான சுவர்கள், உறைகிணறுகள், நீர்வழிச்சாலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த சுடுமண் சிற்பங்கள் என 800க்கும் அதிகமான சான்றுகள் கிடைத்தன.

5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார். அதன்படி அகழாய்வுப் பணிகளும் அவற்றை ஆவணப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்த இடத்தை பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட, ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் அகழாய்வுப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவுக்கு வந்தன. அத்துடன் பார்வையாளர்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடியை பார்வையிட வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும்கூட மக்கள் வருவதால் பார்வையிடுவதற்கான நாட்களை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன், கீழடி தமிழக வரலாற்றின் ஒரு கண்ணாடி என்றும் அந்த கண்ணாடியை அனைவரும் பார்க்க விரும்புவதால் பார்வையிடுவதற்கான கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார. கீழடியில் மேலும் பல அடி ஆழம் தோண்ட வேண்டும் என்று எழும் கோரிக்கை குறித்து பேசிய அவர், தொல்லியல் நுட்பத்தின்படி குறிப்பிட்ட அளவுக்கு மேல் தோண்டக்கூடாது என்றார். 

இதனிடையே ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஒட்டியுள்ள பகுதிகளில் இதற்கான ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments