


ஆண்மை சக்தி என்பது விறைப்புத்தன்மையைக் குறிக்கிறது. இன்று பல ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். எனவே இப்பிரச்சனையில் இருந்து விடுபட பல ஆண்கள் மருத்துவரிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு, மருந்து கடைகளுக்கு சென்று தங்கள் இஷ்டத்திற்கு மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவதால், விறைப்புத்தன்மை பிரச்சனை சரியாகும் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறானது.
ஒருவருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை எந்த காரணங்களுக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். சொல்லப்போனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே முதலில் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்தால் தான், அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்து அப்பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும். நீங்கள் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துபவராயின், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். இக்கட்டுரையில் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும் மாத்திரைகளை உண்பதால் ஏற்படும் பொதுவான ஒரு பக்க விளைவு தான் தலைவலி. இதற்கு காரணம், இந்த மாத்திரைகளால் திடீரென்று இரத்தத்தில் நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுவது தான். பெரும்பாலும் அனைத்து வகையான விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும் மாத்திரைகளாலும் இந்த பக்க விளைவு ஏற்படும்.
விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரைகளால் சந்திக்கும் மற்றொரு பக்க விளைவு செரிமான மண்டலத்தில் தான். அதில் பெரும்பாலும் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கும் ஏற்படும். ஆனால் டயட்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்தினால், இதன் தாக்கத்தைக் குறைக்கலாம். அதுவும் காப்ஃபைன் பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றிற்கு பதிலாக, நீர் அல்லது ஜூஸைக் குடிப்பது நல்லது.
உடலில் திடீரென்று நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும் போது தலைச்சுற்றல் ஏற்படும். பொதுவாக விறைப்புத்தன்மையை சரிசெய்யும் மாத்திரைகளால் லேசான தலைச்சுற்றலை சந்திக்கக்கூடும். இருப்பினும் தலைச்சுற்றல் ஏற்பட்டால், அன்றாட செயல்பாடுகளில் அசௌகரியத்தை உண்டாக்கும். பல நேரங்களில் இம்மாத்திரையால் மயக்கம் ஏற்படலாம். இப்படி மயக்கம் ஏற்பட்டால், அது மாத்திரையின் தீவிர விளைவால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். எனவே விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரையை எடுத்து, மயக்க உணர்வைப் பெற்றால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான மாத்திரைகளை எடுக்கும் சிலர் கடுமையான தசை வலியால் நாள்முழுவதும் அவஸ்தைப்படக்கூடும். எனவே இந்த மாதிரியான வலியால் கஷ்டப்பட்டால், OTC வலி நிவாரணிகளைத் தான் எடுக்க வேண்டும். ஆகவே எப்போதும் மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால், கஷ்டத்தை தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
Comments