
நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எச். வசந்தகுமார். இவர் கன்னியகுமாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வானார். இதனால் தன்னுடைய நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடந்தது. நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், போட்டியிட்டார். திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் களமிறக்கிவிடப்பட்டார்.
இங்கு மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பாதுகாப்பிற்காக 800 போலீசார் நியமிக்கப்பட்டனர்.
இங்கு கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்கள் இங்கு தீவிர பிரச்சாரம் செய்தனர். அதேபோல் அதிமுக சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக இங்கு பிரச்சாரம் செய்தனர்.
இன்று காலையில் இருந்து மக்கள் இங்கு ஆர்வமாக வாக்களித்தனர். சாரல் மழை யிலும் கூட மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இதனால் தற்போதுவரை இந்த தேர்தலில் 62% வாக்குகள் பதிவாகி உள்ளது. இன்று நடந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
Comments