3 டன் காய்கறி அலங்காரம்.. கோயம்பேடு மார்க்கெட்டே காலி.. ஜி ஜின்பிங் வருகைக்காக...

என்ன கலாச்சாரம் சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்காக சென்னையில் தோட்டக்கலைத் துறை சார்பாக பெரிய அளவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பார்வையே இன்று தமிழகத்தின் மேல்தான் இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார். பிரதமர் மோடியுடன் மூன்று நாட்கள் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளது. இன்று மதியம் சென்னை வரும் அவர், மாலை மாமல்லபுரம் செல்கிறார். இந்த சந்திப்பு நிகழ்விற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜிங்பின் வருகைக்காக சென்னையில் தோட்டக்கலைத் துறை சார்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, மேடை இருக்கும் பகுதி வரை காய்கறிகளை வைத்து அலங்காரம் செய்து இருக்கிறார்கள். தமிழக அரசு சார்பாக பிரம்மாண்டமாக காய்கறி மூலம் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முதல்நாள் வந்த காய்கறிகள் மொத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 டன் காய்கறிகள் கொண்டு தோட்டக்கலைத் துறை அலங்காரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல வகையான காய்கறிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இருந்து இதற்காக காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு பகுதியில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாழை தோரணம் தமிழக பாரம்பரியத்தின் படி நிற்கவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சீனா சென்ற போது அங்கு இதேபோல் காய்கறிகள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. சீனாவின் இந்த வரவேற்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு கைமாறாக தற்போது தமிழக அரசு இப்படி செய்துள்ளது.

அட இயற்கையாக அலங்காரம் செய்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவில்லையே என்று கூறி இதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், உணவு பொருட்களை ஏன் இப்படி வீணடிக்கிறார்கள் என்று கூறி இதற்கு எதிராகவும் பலர் டிவிட் செய்துள்ளனர்.

Comments