தனியார்மயமாகும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்கள்?

புதுடில்லி: 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்காக, சிறப்பு குழு ஒன்றை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

உ.பி., மாநிலம், லக்னோ - டில்லி இடையே, அதி நவீன வசதிகளை கொண்ட, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த அக்.,4ல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலை இயக்கும் பொறுப்பு, ஐ.ஆர்.சி.டி.சி., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பெற்றது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், ரயில் சேவையில், மேலும் பல தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், தற்போது மேலும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் வசம், மத்திய அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்றையும் மத்திய அரசு அமைக்க உள்ளது. இக்குழுவில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் மற்றும் நிடி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் கான்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், இக்குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் ஆகியோரும் இடம் பெறுவார்கள்.

Comments