வேலூர் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

வேலூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக சிலவாரங்களாக அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் லோக்சபா தொகுதிக்கு ஆக., 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஓட்டு எண்ணிக்கை ஆக., 9ம் தேதி நடக்க உள்ளது.

தி.மு.க. வேட்பாளராக கதிர்ஆனந்த், அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.சி. சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் பிரசாரம் இன்று (ஆக.,3) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. தொகுதியில் உள்ள வெளியூர்காரர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

வரும் 5-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். இதையடுத்து மாலை 6 மணி முதல் ஓட்டுப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலம் நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது. 

இதற்கான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பிறப்பித்துள்ளார்.

Comments