இந்திய அணி அசத்தல் வெற்றி

லாடர்ஹில்: விண்டீசுக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் சைனி அசத்த இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விண்டீஸ் செல்லவுள்ள இந்திய அணி, மூன்று 'டுவென்டி-20', மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது.

முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை. 'வேகத்தில்' புவனேஷ்வர் குமார், கலீல் அகமதுடன் அறிமுக வீரராக நவ்தீப் சைனி இடம் பிடித்தார். தமிழக சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.

மோசமான துவக்கம்

விண்டீஸ் அணிக்கு லீவிஸ், கேம்பெல் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. சுந்தர் பந்தில் கேம்பெல் டக் அவுட்டானார். சைனி 'வேகத்தில்' பூரன் (20), ஹெட்மயர் (0) சிக்கினர். பாவெல் (4), கேப்டன் கார்லஸ் பிராத்வைட் (9) நிலைக்கவில்லை. போலார்டு (49) அரை சத வாய்ப்பை தவறவிட்டார். விண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சைனி 3 விக்கெட் கைப்பற்றினார்.

ரோகித் விளாசல்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. தவான் 7 பந்தில் 1 ரன் எடுத்து அவுட்டானார். தாமஸ் பந்தில் சிக்சர் அடித்த ரோகித், காட்ரெல் ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்தார். 24 ரன் எடுத்த இவர், சுனில் நரைன் சுழலில் சிக்கினார். ரிஷாப் பன்ட் வந்த வேகத்தில் 'டக்' அவுட்டாகினார். மணிஷ் பாண்டே (19) ஏமாற்றினார். கோஹ்லி (19 ரன், 29 பந்து), காட்ரெலிடம் சிக்கினார். குர்னால் பாண்ட்யா, 12 ரன்னுக்கு போல்டானார்.

கடைசியில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 17.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் (8), ஜடேஜா (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 'டுவென்டி-20' தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

Comments