நல்லவர்களுக்கு இங்கு இடம் இல்லை.. நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.. குமாரசாமி அதிரடி

HD Kumaraswamy says he want to be away from politics ஹாசன்: தற்போதைய அரசியலால் வெறுப்படைந்திருப்பதாகவும், எனவே அதிலிருந்து விலகி இருக்க நினைப்பதாகவும், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் குமாரசாமி. அப்போது அவர் கூறியதாவது: நான் தற்செயலாக அரசியலில் நுழைந்தேன். இரண்டு முறை முதல்வராக ஆட்சி செய்ய கடவுள் எனக்கு வாய்ப்பு அளித்தார். இன்றைய அரசியலில் நல்லவர்களுக்கு இடமில்லை.

எனது குடும்பத்தை பற்றி பொது வெளியில் சர்ச்சை வேண்டாம். அவர்கள் நிம்மதியாக வாழட்டும். நான் அரசியலில் தொடர விரும்பவில்லை. நான் ஆட்சியில் இருந்தபோது நல்லது செய்தேன். மக்களின் இதயத்தில் இடம் வேண்டும் என்றுதான் நினைத்தேன்.

எனது தலைமையிலான 'பாவ அரசை' அகற்றி ஒரு 'புனித அரசை' ஆட்சிக்கு கொண்டுவருவதில் சில ஊடகங்கள் வெற்றி பெற்றுள்ளன. எடியூரப்பா தலைமையில் நிர்வாகம் இப்போது எப்படி நடக்கிறது என்பது எனக்குத் தெரியும். தொடர் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சில அதிகாரிகளுக்கு பதவியிடமே தரப்படாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார். குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அந்த கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக தலைமையில் எடியூரப்பா அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக குமாரசாமி இவ்வாறு கருத்து கூறியிருக்கலாம் என்கிறார்கள் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில், தேவகவுடா துவங்கி, குமாரசாமி மகன் நிகில் கவுடா வரை அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள். அவ்வளவு எளிதாக அரசியலை விட்டு போகக்கூடியவர் இல்லை குமாரசாமி என்கிறார்கள் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள்.

Comments