
இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு நடப்பு 2019ம் வருடம் மிக மோசமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டை தங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக மறக்கவே மாட்டார்கள். ஆட்டோமொபைல் துறை நடப்பு ஆண்டில் அந்த அளவிற்கு பெருத்த அடியை வாங்கி கொண்டுள்ளது.
கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மிக கடுமையாக சரிவடைந்து கொண்டே செல்கிறது. எனவே வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்து கொண்டே வருகின்றன.
இதன் எதிரொலியாக ஆட்டோமொபைல் துறையை சார்ந்து இயங்கி வரும் லட்சக்கணக்கானோரின் வேலை தொடர்ச்சியாக பறிபோய் வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் 3.50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 200க்கும் மேற்பட்ட வாகன டீலர்ஷிப்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால், இன்னும் பல லட்சம் பேர் வேலையிழக்கலாம் எனவும், இன்னும் ஏராளமான டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்படலாம் எனவும் அபாய சங்கு ஊதப்பட்டு வருகிறது. இப்பேர்பட்ட கடுமையான சரிவில் இருந்து மீண்டு வர வேண்டுமென்றால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவ வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு தற்போது வரை ஜிஎஸ்டியை குறைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை உடனடியாக சரிவில் இருந்து மீள்வதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை.
ஆட்டோமொபைல் துறை இந்த அளவிற்கு மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருப்பது ஏன்? என சமூக வலை தளங்கள் மற்றும் ஊடகங்களில் தற்போது அனல் பறக்க விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், முக்கியமான காரணங்களை நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
Comments