8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசம்.. ஒரேயடியாக சரிந்த ரூபாய் மதிப்பு! காஷ்மீர் பிரச்சினையும் காரணம்

Rupee logs worst fall of 2019 on Kashmir டெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.60 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்று மிக சரிவடைந்து ​​அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.60 ஆக குறைந்துள்ளது.

2018ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு ரூபாய் கண்ட மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சி இதுவாகும். உலகளாவிய கரென்சி மார்க்கெட் பிரச்சினையின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், சீன பண மதிப்பான யுவான், 10 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, ஒரு டாலருக்கு 7 யுவான் என்ற அளவுக்கு சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் டாலருக்கு எதிராக 70.06 என்ற அளவில் இருந்த இந்திய ரூபாய் மதிப்பு, சற்று நேரத்தில் 70.60 ஆக குறைந்தது. சமீபத்திய தகவல்படி ரூபாய் மதிப்பு 70.40 என்ற அளவில் உள்ளது. இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறும் முதலீடுகளும் ரூபாய் மதிப்பு குறைய ஒரு காரணம். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது நினைவிருக்கலாம். காஷ்மீர் விவகாரத்தில் ஸ்திரமற்ற தன்மை இருப்பதும் ரூபாய் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Comments