கர்நாடகாவில் கனமழை: 74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

பெலகாவி: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு, கலபுரகி, பெலகாவி, தார்வாட் உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெலகாவியின் 74 கிராமங்களில் 'ஹை அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.கர்நாடகத்தின் 156 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சில பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் தொடர் கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணா நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த நீர் கர்நாடகாவின் எல்லை மாவட்டமான பெலகாவியில் பாய்வதால் அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் கடல் போல் காட்சியளிக்கிறது. பெலகாவியின் சிக்கோடி தாலுகா ஹரிகிராந்தி கிராமத்தில் 100 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. அவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் 74 கிராமங்களில் 'ஹை அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தலா இரண்டு படையினர் பெலகாவியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சம்நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக ராணுவத்தினரை வரவழைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சிக்கமகளூருவின் சார்மாடி காட் வனப்பகுதியில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறு மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. மலையிலிருந்து பெரிய கற்கள் சாலையில் சரிந்துள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற 100க்கும் மேற்பட்டோர் வனப்பகுதியில் சிக்கினர். 

தகவலறிந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி அவர்களை மீட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மண்சரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

Comments