
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 581 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 36,537 ஆக உள்ளது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 178 புள்ளிகள் சரிந்து 10,818,ஆக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதே என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது சுமார் 1 சதவிகிதத்திற்கும் மேல், வீழ்ச்சி கண்டு 0.825 பைசா வீழ்ச்சி கண்டு, 70.41 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் வீழ்ச்சி கண்டு வரும் இந்த நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சர்வதேச அளவில் முதல் இரண்டு பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் ஆரம்பிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இருமுக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றான அமெரிக்கா மீண்டும் சீனாவின் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவிகித வரியை அதிகரிக்க போவதாக கூறியுள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் நடக்குமா நடக்காதா? என்ற பதற்றமான நிலையில் சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சியுடன் காணப்படுகின்றன.
மேலும் இந்திய ரூபாயின் சரிவினால், அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் சந்தைகள் மேலும் சரிந்து கொண்டே வருகின்றன.
இதில் டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட சில பங்குகள் டாப் கெய்னராக இருந்தாலும், அதிகப்படியான ஏற்றம் காணவில்லை. அதிகபட்சமாக டி.சி.எஸ் மட்டுமே 1.50 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது.
இதுவே யெஸ் பேங்க் அதிகபட்சமாக 6.80 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும், டாடா மோட்டார்ஸ் 5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும், எஸ்.பி.ஐ, ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பல பங்குகள் 4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும் டாப் லூசர்களாக காணப்படுகின்றன.
இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் அனைத்து துறை குறையீடுகளும் சிவப்பு நிறத்திலே காணப்படுகின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் 3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும், மெட்டல் பங்குகள் 2.50 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும், எனர்ஜி பங்குகள் 2 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.
மேலும் பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வரும் இந்த நிலையில், பல பங்குகளுக்கு, முடிவுகள் சாதகமான நிலையில் இல்லாததை அடுத்து, சந்தை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.
Comments