இப்படி செய்திருக்க கூடாது.. இது பெரிய துரோகம்.. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

DMK Chief Stalin Opposes the removal of 370 in Kashmir சென்னை: காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 

இது மட்டுமில்லாமல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் அவையில் இதற்கு எதிராக பேசினார்கள். சென்னையில் பேட்டி அளித்த ஸ்டாலின், ஜம்மு காஷ்மீரை பிரிப்பது கண்டனத்துக்குரியது. 370-வது பிரிவு நீக்கம் மக்களுக்கு எதிரானது. அம்மாநில மக்களை கேட்காமல் நாம் இது போன்ற பெரிய முடிவை எடுக்க கூடாது. அம்மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் இது. இன்று ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. முதலில் காஷ்மீரில் முறையாக தேர்தல் நடத்த வேண்டும். அங்கு தேர்தல் நடத்தி சட்டசபையை கூட்ட வேண்டும். அவர்கள் மாநில எம்எல்ஏக்கள்தான் இந்த சட்டம் குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதை நீக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது. இதற்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுக இதற்கு ஆதரவு அளித்துள்ளதன் மூலம் மிக மோசமான உதாரணமாக மாறி உள்ளது. அதிமுக என்பதற்கு பதிலாக அவர்கள் தங்கள் கட்சியை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று மாற்றிக்கொள்ளலாம், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Comments