
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆஷிஷ் ஹர்சராஜ் கூறுகையில்,ஆட்டோமொபைல் துறை மீள்வதற்கான எந்த வாய்ப்பும் உள்ளதாக தெரியவில்லை. இதனால், வருங்காலங்களில் வேலை இழப்புகள் தொடர வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான வேலை இழப்புகள் கடந்த 3 மாதங்களாக தான் நடந்துள்ளன. மே மாதத்தில் துவங்கிய வேலை இழப்புகள், ஜூன், ஜூலையிலும் தொடர்ந்தது. தற்போது, வாகன விற்பனை துறையில் தான் வேலை இழப்புகள் நடந்துள்ளன. மந்தநிலை தொடர்ந்தால், தொழில்நுட்ப பிரிவில் இருப்போரும், வேலையிழப்பை சந்திக்க நேரிடும். தற்போது வரை, இந்தியா முழுவதும் 2 லட்சம் பேர் வேலை இழப்புகளை சந்தித்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் எங்களின் கணிப்பின்படி வாகன முகவர்கள் 7 முதல் 8 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 15 ஆயிரம் பேர் நடத்தும் 26 ஆயிரம் ஆட்டோமொபைல் ஷோரூம்கள் மூலம் 25 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை பெற்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்த 18 மாதங்களில் நாடு முழுவதும் 271 நகரங்களில் 286 ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 3 மாதங்களில் மட்டும் 286 ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. 32 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். விற்பனையில் ஏற்பட்ட மந்தம் தான் வேலையிழப்புக்கு முக்கிய காரணம்.கடந்த 3 அல்லது 4 மாதங்களில், வருமானம் குறைந்த நிலையில், உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு அதிகரித்து வருகிறது. இதனால், வேறு வழியின்றி ஆட்களை குறைத்து வருகிறார்கள்.
கடந்த மார்ச் வரை, விற்பனையில் மந்தம் தற்காலிகமானது. மீண்டும் புத்துயிர் பெறும் என கருதி, ஆள் குறைப்பில் முகவர்கள் ஈடுபடவில்லை. தேர்தலுக்கு பின் முதல் காலாண்டில் ஏதேனும் மாற்றம் நிகழும் என வாகன முகவர்கள் எதிர்பார்த்தனர். தேர்தல் முடிவுகளும் சிறப்பாக வெளிவந்தன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக, மந்த நிலை தொடர்ந்ததால், வேறு வழியின்றி ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மனித சக்தி, மிகவும் முக்கியமானது. அவர்களின் பயிற்சிக்கு ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதால், ஆட் குறைப்பை முகவர்கள் கடைசி கட்ட நடவடிக்கையைாக தான் எடுத்துள்ளனர். மந்த நிலை துவங்கியதும், முதலில், உற்பத்தியை குறைத்தனர். மற்ற செலவுகளை குறைத்தாலும், ஏப்ரல் வரை ஆட்குறைப்பை செய்யவில்லை. ஆனால், தற்போது கடினமான முடிவாக இருந்தாலும், ஆட் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பொருளாதாரத்தில், குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில், நிலவும் கடுமையான சூழ்நிலையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஒரு சில நாட்களில், எங்களுக்கு அரசின் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. நிரந்தரமாக குறைக்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு ஜிஎஸ்டி, அரசுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், இந்த குறைப்பு, ஆட்டோமொபைல் துறையை புத்துயிர் பெற செய்யும். நாட்டின் ஜிடிபியில் வாகன உற்பத்தி துறை 8 சதவீதம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பின் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் ஜூன் மாதத்தில், 69,42,742 கார்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு , இந்த விற்பனை 12.35 சதவீதம் குறைந்து 60,85,406 ஆக இருந்தது.சில்லரை வர்த்தகத்தில், நடப்பு ஆண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 54,42,317 வாகனங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், சில்லறை விற்பனை 51,16,718 ஆக இருந்தது. வாகனங்கள் விற்பனையில், பயணிகள் வாகனங்கள் விற்பனைதான் மோசமாக உள்ளது. ஜூலை மாத நிலவரப்படி, மாருதி சுசூகி விற்பனை 36.3 சதவீதம் குறைந்துள்ளது. ஹூண்டாய் விற்பனை 10சதவீதமும், எம்&எம் விற்பனை 16 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பிவி விற்பனை 31 4தவீதமும், ஹோண்டா விற்பனை 48.67 சதவீதமும் குறைந்துள்ளது.
Comments