
ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து, சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சமீபத்தில் நடந்தது.
அதில் பங்கேற்ற, சில கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வலியுறுத்தின. ஆனால், தி.மு.க., தரப்பில், போராட்டம் தேவையில்லை என, கூறப்பட்டது.முடிவில், தி.மு.க., கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி,,க்கள், ஸ்டாலின் தலைமையில், டில்லியில், பிரதமர், மோடியை சந்தித்து, ஜம்மு - காஷ்மீரில், வீட்டுச் சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மோடியை சந்திக்க, அனுமதி கிடைக்கவில்லை.
இதையடுத்து, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை:ஜம்மு - காஷ்மீர் தலைவர்களான, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர், ஜனநாயகத்தின் குரலாக நின்று, மக்களுக்கு அரும் பணியாற்றியவர்கள்.மத்திய அரசு, அவர்களை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்துள்ளது; அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை, பா.ஜ., அரசு, சர்வதேச பிரச்னையாக்கி விட்டது; அக்கட்சிக்கு, ஜனநாயகத்தில் நம்பிக்கைஇல்லை.ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள, அனைத்து தலைவர்களையும், மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 22ம் தேதி, டில்லி ஜந்தர்மந்தரில், தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.டில்லியில் ஆர்ப்பாட்டம் நடப்பதால், சென்னை, அறிவாலயத்தில், நாளை நடக்க இருந்த, தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Comments