தேர்தல் கமிஷனர் குறிப்பு: வெளியிட மறுப்பு

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷாவின் தேர்தல் பிரசார பேச்சுகள் குறித்து தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா மாறுபட்டு எழுதியுள்ள கருத்துகளை வெளியிட தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா சில கூட்டங்களில் பேசியவை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானவை என தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றன. அதன் மீது விசாரணை நடத்திய இரு தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான அசோக் லவாசா சில ஆட்சேபகரமான குறிப்புகளை எழுதியுள்ளார். அவற்றை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஆர்வலர் ஒருவர் கேட்டிருந்தார்.
அந்த தகவல்களை தர மறுத்து தேர்தல் கமிஷன் நேற்று அளித்துள்ள பதிலில் 'அந்த குறிப்புகளை வெளியிட்டால் தனிநபர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அல்லது அந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அவற்றை வெளியிட முடியாது' என தெரிவித்துள்ளது.

எனினும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என கூறப்படும் நபர் யார் என்பதை தேர்தல் கமிஷன் தெரிவிக்கவில்லை.

Comments