
இந்த நிலையில் சென்னையில் இன்று தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன், தினகரன் அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதன் பிறகு, காலை சுமார் 11.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். அப்போது அவர் கூறியதாவது: நான் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. அந்த அளவுக்கு அது முக்கியமான விஷயமும் இல்லை. ஏற்கனவே எப்எம் ரேடியோ ஒன்றுக்கு தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டி கட்சி நலனுக்கு எதிராக இருந்தது. இது தொடர்பாக அவரைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டதோடு, இனிமேலும் இப்படிச் செய்தால் கட்சியிலிருந்து நீக்கி விடுவேன் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் இதன் பிறகும் அவர் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். எனவே இனிமேல் விளக்கம் கேட்க தேவையில்லை. புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அவர், நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் விஸ்வரூபம் எடுக்க முடியாது. என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். இரவு நேரத்தில் நிதானத்தில் இருக்கும்போது அவ்வாறு பேசிவிட்டார். மற்றபடி பேசியிருக்க முடியாது. ஏற்கனவே அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டு தான் இவர் பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். தங்க தமிழ்ச்செல்வனை கட்சியிலிருந்து நீக்குவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. தொலைக்காட்சி சேனல்கள்தான் தங்க தமிழ்ச்செல்வன் ஏதோ பெரிய நபர் போல காண்பித்து விட்டீர்கள். அவரும் அதை நம்பி கெட்டு போய்விட்டார். ஒரு வகையில் மீடியாக்கள்தான் அவரை கெடுத்து விட்டீர்கள். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது, திமுக எடுக்கும் நிலைப்பாட்டை தான், நானும் எடுப்பேன் என்று தினகரன் தெரிவித்தார்.
Comments