தேர்தல் வராமல் ஆட்சி மாற்றம் : ஸ்டாலின் திட்டவட்டம்

தேர்தல்,ஆட்சி மாற்றம், ஸ்டாலின்,திட்டவட்டம்சென்னை: 'அடுத்த தேர்தல் வந்து தான், ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்ற, அவசியம் கிடையாது; தேர்தல் வராமலேயே,ஆட்சி மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசினார்.
சென்னை. மக்களுக்கு போர்க்கால அடிப்படையில், குடிநீர் வழங்க வலியுறுத்தி, ஸ்டாலின் தலைமையில், சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் நேற்று , ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 'குடம் இங்கே; தண்ணீர் எங்கே' என்ற, வாசகம் ஒட்டப்பட்ட, காலி குடங்களுடன், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த, ஸ்டாலின் பேசியதாவது:'பராசக்தி' படத்தில், கதாநாயகன், தமிழகத்திற்கு வந்தவுடன், 'அய்யா, பிச்சை போடுங்கள்' என்கிற குரல் கேட்கும். உடனே, அந்த கதாநாயகன், 'தமிழகத்தின் வரவேற்பு குரலே மிகச் சிறப்பாக இருக்கிறது' என்பார். அதுபோல், இன்றைக்கு, தமிழகத்தின் குரலாக, 'தண்ணீர் எங்கே' என, கேட்கக் கூடியதாக உள்ளது.அரசிடம் நிதி பஞ்சம், திட்டங்களுக்கு பஞ்சம், வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சம், நீதிக்கு பஞ்சம், நேர்மைக்கு பஞ்சம், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் என, எல்லாவற்றிலும் பஞ்சம் இருப்பது போல, குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், 'யாகம் நடத்தினால், மழை வரும்' என்கின்றனர். யாகம் நடத்துவதை, நான் தவறாக எண்ணவில்லை.

பதவியை காப்பாற்ற யாகம்

தண்ணீருக்காகவும், மழைக்காகவும், யாகம் நடத்தினால் சந்தேஷப்படுவேன்.ஆனால், அவர்களின் பதவியை காப்பாற்ற, யாகம் நடத்துகின்றனர்.வரும், 28ல், சட்டசபை கூடுகிறது. சபாநாயகர் தனபால் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, கடிதம் கொடுத்திருக்கிறோம். அதற்கு, எந்த மாதிரி சூழ்நிலை அமையப் போகிறது என்பது தெரியவில்லை.

சபாநாயகரை நீக்குவதை விட, முதல்வரை தான் பதவியிலிருந்து, முதலில் நீக்க வேண்டும்; அது,விரைவில் நடக்கத் தான் போகிறது. அடுத்த தேர்தல் வந்து தான், இந்த ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்ற, அவசியம் கிடையாது. தேர்தல் வராமலேயே, ஆட்சி மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

எப்படி என, யாரும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள், என்ன எதிர்பார்க்கிறீர்களோ, அது நடக்கத் தான் போகிறது. அதைப் பற்றி, நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.விரைவில், தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், முதல் வேலையாக, கடல் நீரை குடிநீராக்கக் கூடிய திட்ட முறைகேடுகளை விசாரித்து, அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மட்டுமல்ல, முதல்வர் மட்டுமல்ல, அதிகாரிகளையும், சட்டத்தின் முன் நிறுத்துவோம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க.வில் அ.ம.மு.க., நிர்வாகிகள்

சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அ.ம.மு.க., கட்சியின், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் டாக்டர் ஷியாம், மாநில ஜெ., பேரவை இணை செயலர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில், முன்னாள் கவுன்சிலர்கள் கணபதி திருமலைக்குமார், முருகன், மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் துரை கற்பகராஜ் மற்றும் நிர்வாகிகள், தி.மு.க.,வில்இணைந்தனர்.

விருதுநகர் தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் ராமசந்திரன், வடக்கு மாவட்ட செயலர் தங்கம் தென்னரசு, ராஜபாளையம் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய அரசுக்கு கண்டனம்

தி.மு.க., தலைவர், ஸ்டாலினின் நேற்றைய அறிக்கை:'மேகதாது அணையை கட்டியே தீருவோம்' என, கர்நாடக அரசு, அடம் பிடித்து வருவதும், அதற்கு திரைமறைவில், மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக, ஆதரவுக் கரம் நீட்டி வருவதும், கடும் கண்டனத்திற்குரியது.காவிரி இறுதி தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு, தண்ணீரை திறந்து விட வேண்டிய கர்நாடக அரசு, 'மேகதாது அணை கட்டினால் தான், தண்ணீர் திறந்து விட முடியும்' என கூறுவது, தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சி.

மேகதாதுவில், புதிய அணை கட்டும் முடிவை, கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று, மத்திய அரசு அறிவுறுத்துவதுடன், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தர முடியாது என்றும், உடனே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருத்து சொல்லுங்க'

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:குடிநீர் பஞ்சம் துவங்கி, வேலையில்லா திண்டாட்டம் வரை, தமிழகத்தில் நிலவும், ஒவ்வொரு பேரவலமும், வரும் சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை, தி.மு.க., உறுதி செய்யும். உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்னை என, நீங்கள் கருதுவதை, voiceofTN@dmk.in என்ற, மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments