கிடப்பில் மழைநீர் சேகரிப்பு தணிக்கை திட்டம் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இதுவும் காரணம்!

கிடப்பில்,மழைநீர்,சேகரிப்பு,தணிக்கை,திட்டம்  வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், முறையாக உள்ளதா என்பதை தணிக்கை செய்ய, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவித்த திட்டம், இன்னும் ஏட்டளவிலேயே உள்ளது. முறையாக செயல்படுத்தி இருந்தால், தண்ணீருக்கு தவம் கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
தமிழகத்தில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க, அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதை, தமிழக அரசு கட்டாயமாக்கியது. இதற்கான சட்டம், 2003ல், செயல்பாட்டிற்கு வந்தது. இதன்படி, புதிதாக கட்டடம் கட்டும்போது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக, வளர்ச்சி விதிகளில், தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டன.இருந்தும், பெரும்பாலான கட்டடங்களில், அரசின் கட்டாயத்துக்காக, பெயரளவிலேயே, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனால், திட்ட இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடுகள், கட்டடங்களில்,மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா என, தன்னார்வ அமைப்புகள் உதவியுடன், தணிக்கை செய்யும் புதிய திட்டத்தை, தமிழக அரசு, 2014ல், அறிவித்தது. முதற்கட்டமாக, சென்னையில் தணிக்கை திட்டத்தை செயல்படுத்தி, பின், தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்து அறிவித்த, இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,விடம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல், ஏட்டளவில் முடங்கியுள்ளது.

இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தணிக்கை செய்ய, 2014ல் அறிவிக்கப்பட்ட திட்டம், இன்னும் ஏட்டளவிலேயே உள்ளது. சாத்திய கூறுஆய்வு, தன்னார்வ அமைப்பு தேர்வு, பரிந்துரைகள் இறுதி செய்தல் என, இத்திட்டம் கோப்புகளுக்குள்ளேயே சுற்றி வருகிறது. இத்திட்டத்தை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முழு அக்கறையுடன் செயல்படுத்தி இருந்தால், மழை நீர் முறையாக சேகரிக்கப்பட்டு இருக்கும். நிலத்தடி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்காது; தற்போது ஏற்பட்டுள்ள, தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்து இருக்கலாம்.

தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத இந்த சூழலை உணர்ந்து, இப்போதாவது, மழைநீர் சேகரிப்பு தணிக்கை திட்டத்தை, முறையாக செயல்படுத்த, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முன்வர வேண்டும். மூன்று மாதங்களில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதற்கு முன் தணிக்கையை முடிக்க வேண்டும்.. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments