சபாநாயகர் மீதான திமுகவின் நோட்டீஸ் ஏற்பு: ஜூலை 1-ல் எடப்பாடி அரசு "கதம்... கதம்.."

சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில் தமிழக சட்டசபை கூட்டம் ஜூன் 28ல் துவங்குகிறது; ஜூலை 30 வரை நடக்கிறது. இக்கூட்டத் தொடரில் சபாநாயகர் தனபால் மீது தி.மு.க. கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க அரசு தயார் நிலையில் இருப்பதால் ஜூலை 1ல் அது விவாதத்திற்கு வரலாம் என தெரிகிறது.

இதற்கிடையில் அரசு வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகளுக்கு தமிழக அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் பெறப்பட்டது.தமிழக சட்டசபையில் 2019 - 20ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப். 8ல் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் பிப். 14 வரை நடந்தது. அதன்பின் லோக்சபா தேர்தல் காரணமாக துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஜூன் 28ல் சட்டசபையை கூட்ட கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி அளித்துள்ளார்.

இதையடுத்து நேற்று பகல் 12:00 மணிக்கு சென்னையில் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது.முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அரசு கொறடா ராஜேந்திரன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி, சட்டசபை காங். தலைவர் ராமசாமி, முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 30 வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இரங்கல்

முதல் நாள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். சூலுார் எம்.எல்.ஏ. கனகராஜ், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. ராதாமணி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்படும். ஜூலை 1 முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் துவங்கும். தமிழகத்தில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது; மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இப்பிரச்னை சபையில் அனலை கிளப்பும் என தெரிகிறது.லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளும் விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை - சேலம் எட்டு வழி சாலை மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்னை போன்ற விவகாரங்கள் சட்டசபையில் புயலை கிளப்புவது உறுதி. சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளார்.

தினமும் கேள்வி நேரம்

அந்த தீர்மானம் ஜூலை 1 சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுகிறது. இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்துவது குறித்து அன்றைய தினம் முடிவு செய்யப்படும் .இது குறித்து சபாநாயகர் தனபால் கூறுகையில் ''சட்டசபை கூட்டம் 23 நாட்கள் நடக்க உள்ளது. தினமும் கேள்வி நேரம் உண்டு. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சபை விதிகளின்படி ஜூலை 1 நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும். அதன் மீதான விவாதம் குறித்து சபையில் முடிவு செய்யப்படும்'' என்றார்.இதற்கிடையில் சட்டசபை அறிவிப்புகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்தது. துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காலை 10:05 மணிக்கு கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின் போது துறை வாரியாக வெளியிட வேண்டிய அறிவிப்புகள் சட்டசபை 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட வேண்டிய அறிவிப்புகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு அதிகாரிகள் வெளியேறியதும் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் அரசியல் விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

அப்போது முதல்வர் கூறியதாவது: சட்டசபையில் தி.மு.க. கூட்டணிக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அமளியில் ஈடுபடுவர். அப்போது அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பர்; மற்றவர்கள் அமைதி காக்கவேண்டும். பா.ஜ.வுடனான கூட்டணி தொடர்கிறது. மத்திய அரசு உதவி இருந்தால் தான் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியும். எனவே பா.ஜ.வை விமர்சிக்க வேண்டாம். கூட்டத்தில் நடக்கும் விஷயங்கள் கட்சி விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் பேச வேண்டாம். இவ்வாறு அவர் கூறியதாக தெரிகிறது.

நீர் மேலாண்மை அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமலிருக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்தும் புதிய நீர் மேலாண்மை திட்டம் குறித்தும் சட்டசபையில் 110 விதியில் முதல்வர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிட தி.மு.க. லோசனை?

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற போதுமான எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.விடம் இல்லை. எனவே அந்த தீர்மானத்தை வலியுறுத்தாமல் விடுவது குறித்து தி.மு.க. தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி துணைத் தலைவரான துரைமுருகன் கூறியதாவது:அலுவல் ஆய்வு கூட்டத்தில் பேசியதை வெளியில் கூறக் கூடாது. அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். உங்களிடம் விளக்கமாக சொல்லி விட்டா செய்ய முடியும்; என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அன்றைய தினம் பாருங்கள். சட்டசபையில் என்ன செய்வோம் என்பதை கூறிவிட்டால் அவர்கள் சுதாரித்து கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.சபாநாயகர் தனபாலிடம் 'உங்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதா' என கேட்டதற்கு ''எங்களுக்கு தகவல் இல்லை'' என்றார்.

Comments