ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Give electricity connection to Tuticorin Sterlite: Supreme Court தூத்துக்குடி : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக தமிழக அரசு மின்சார இணைப்பை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த வருடம் மே மாதம் 28ஆம் தேதி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தருண் அகர்வால் குழு, தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படவில்லை என்று அறிக்கையளித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் தொழிற்சாலையை, மூன்று வாரங்களுக்குள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், வேதாந்தா நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் இன்று தனது உத்தரவை பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாய உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால், தூத்துக்குடியில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Comments