பிரம்மாஸ்திரமாக தன் தங்கை பிரியங்காவை களத்தில் இறக்கியுள்ளார் ராகுல்

வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்கும், ராகுலின் முயற்சிகள், தொடர்ந்து தோல்வி அடைந்ததை அடுத்து, பிரம்மாஸ்திரமாக, தன் தங்கை பிரியங்காவை களத்தில் இறக்கியுள்ளார், அவர். பா.ஜ., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை சமாளிக்கும் வகையில், ராகுல் வகுத்துள்ள இந்த வியூகத்துக்கு, கட்சியினர் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, ஏப்ரல் - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கஉள்ளது; இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கீகரிக்க மறுப்பு

பா.ஜ.,வுக்கு எதிரான மாநில கட்சிகளுடன் சேர்ந்து, 'மெகா கூட்டணி' அமைக்க, காங்., தலைவர், ராகுல், 48, செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.பல மாநிலங்களில் செல்வாக்குடன் திகழும் பிராந்திய கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கூட்டணியின் தலைவராக, ராகுலை அங்கீகரிக்க மறுத்து வருகின்றனர்.

கருணாநிதி சிலை திறப்பு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்த போது, 'எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக, ராகுலை நிறுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்தார்.இந்த கருத்தை, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்கள் ஏற்கவில்லை. மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில், சமீபத்தில், 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற, பிரமாண்ட பேரணி மற்றும் மாநாட்டை நடத்தினார். தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், மம்தா கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில், 'தேர்தலுக்கு பின், பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம்' என, அறிவிக்கப்பட்டது.

அதேபோல், நாட்டில் அதிக லோக்சபா தொகுதிகள் உடைய மாநிலமான, உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதியும், சமாஜ்வாதி தலைவர், அகிலேஷும், காங்கிரசை ஒதுக்கி, தங்களுக்குள் கூட்டணி அமைத்துள்ளனர்.

கலக்கம்

காங்.,கை கைகழுவி விட்டு, மாநில கட்சிகள் அணி திரண்டதால், ராகுலும், அக்கட்சி மூத்த தலைவர்களும் திணறிப் போயினர். எனவே, 'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு பலத்த போட்டியை தர, காங்கிரசால் முடியாது' என, காங்.,தலைவர்கள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த, தன் தங்கை பிரியங்காவை, பா.ஜ., போன்ற கட்சிகளுக்கு எதிரான, பிரம்மாஸ்திரமாக, காங்., தலைவர் ராகுல், களமிறக்கி உள்ளார்.உ.பி.,யின் கிழக்கு பகுதிக்கு, காங்., பொதுச் செயலராக, பிரியங்கா, 47, நியமிக்கப்பட்டு உள்ளார் . பிப்., முதல் வாரத்தில், இந்த பொறுப்பை, பிரியங்கா ஏற்கவுள்ளதாக, காங்., தெரிவித்துள்ளது. பா.ஜ.,வுக்கு வலுவான போட்டியை அளிக்கும் வகையில், இந்த வியூகத்தை ராகுல் வகுத்துள்ளதாக தெரிகிறது. 

மாயாவதி, அகிலேஷ் மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக, பிரியங்காவை அரசியலில் களமிறக்கி, ராகுல் தொடுத்துள்ள பிரம்மாஸ்திரத்துக்கு, காங்., கட்சியினர் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். உ.பி.,யில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 1980 வரை, இந்த மாநிலம், காங்.,கின் கோட்டையாக திகழ்ந்தது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய மாநில கட்சிகளும், பா.ஜ.,வும் செல்வாக்கு பெற்றதை அடுத்து, காங்., பெரியளவில் சரிவை சந்தித்தது.

எனவே, 'உ.பி.,யில், காங்.,கை வலுப்படுத்தவும், லோக்சபா தேர்தலில், ராகுலுக்கு உதவவும், பிரியங்கா சரியான தேர்வாக இருப்பார்' என, காங்., கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. பிரியங்காவின் அரசியல் பிரவேசத்திற்கு, அவரது கணவர், ராபர்ட் வாத்ரா, பாராட்டு தெரிவித்துள்ளார்.

'குடும்ப கூட்டணி'

பிரியங்காவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், சம்பித் பத்ரா, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பல்வேறு கட்சிகள் சேர்ந்து அமைத்த கூட்டணியில், காங்., சேர்த்துக் கொள்ளப்பட வில்லை. இந்த கூட்டணியில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 'குடும்பக் கூட்டணி'யை, காங்., தலைவர் ராகுல் அமைத்துள்ளார்.

இதன் மூலம், தலைமை பொறுப்பில், ராகுல் தோல்வி அடைந்துள்ளார் என்பதை, காங்., ஏற்றுள்ளது. 'வரும் லோக்சபா தேர்தல், வாரிசு தலைவர்களுக்கும், நாட்டுக்காக உழைப்போருக்கும் இடையிலானது' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்; அது சரியாகி விட்டது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவது, காங்கிரசில் வழக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments