சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் 3வது நாளாக இன்றும் (ஜன.,24) தொடர்கிறது. இன்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை
வேலைக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தமிழக தலைமை செயலாளர் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை கமிஷனரும் எச்சரித்துள்ளார்.
கடிதம்
மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய்த்துறை கமிஷனர் சத்யகோபால் அனுப்பிய கடிதம்: பணிக்கு வராத அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கஜா புயல் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது பணிக்கு வராத ஊழியர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
இருந்தும் போராட்டத்தை விடப் போவதில்லை என ஏற்கனவே கோர்ட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆலோசனை
இதற்கிடையில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தொடரும்
இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த தாஸ் என்பவர் கூறுகையில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்துகின்றனர். நாளை திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும். 28 ம் தேதி போராட்டத்தின் வடிவம் மாறும். எங்களது நிலைப்பாட்டை ஐகோர்ட் மதுரை கிளையில் வரும் 28 ம் தேதி தெரிவிப்போம். எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் 100 சதவீத பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்றார்.
Comments