அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் சேர்ப்பு

OPS brother O.Raja who expelled from ADMK now joins in the same party சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா கடந்த வாரம் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா ஒன்றிய தலைவராக கடந்த 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.ராஜாவின் அண்ணனும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில், ஓ.ராஜா மீது கொலை வழக்கு புகார் எழுந்ததை தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக ஆன நேரத்தில், மதுரை, தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் ஓ.ராஜாவின் தலையீடு அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது. ஓ.பன்னீர் செல்வமே தனது சகோதரரை கட்சியில் இருந்து நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது செயலுக்கு ஓ.ராஜா நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்ததால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்டதாக அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Comments