யார் பிரதமர் வேட்பாளர் :
பிரதமர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை பிரிவினையை ஏற்படுத்தி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் லோக்சபா தேர்தலுக்கு பிறகு யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளதாக காங்., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.,வை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் என்பதால் முக்கிய மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் வியூகம் :
திரிணாமுல் காங்., தலைவர் மம்தா, காங் தலைவர்களான ராகுல், சோனியாவை சந்தித்து பேசி உள்ளார். தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசி உள்ளார். பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டு வங்கியை அதிகரிக்கவும், விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு இன்மை, தலித்கள் விவகாரம் போன்றவற்றை கையில் எடுத்து மோடி அரசின் தோல்விகளை முன்வைத்து பிரசாரம் செய்யவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
3 மாநிலங்களுக்கு குறி :
உ.பி., பீகார், மகாராஷ்டிராவில் 168 லோக்சபா தொகுதிகள் உள்ளதால். இந்த 3 மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்தால் மீண்டும் பிரதமராவதை மோடி மறந்து விட வேண்டும் என காங்., மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். மாநில கட்சிகளை ஒன்றிணைப்பதுடன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய மற்றும் பா.ஜ.,மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை முதன்மையானதாக கொண்டு காங்., திரிணாமுல் போன்ற கட்சிகள் கூட்டணி பேச்சை நடத்தி வருகின்றன.
Comments