அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கு, 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்வில் மறுமதிப்பீடுக்காக, 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 73 ஆயிரத்து, 733 பேர் மறுமதிப்பீட்டின் வாயிலாக தேர்ச்சி பெற்றனர். அதிலும், 16 ஆயிரத்து, 636 பேர், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் பலர், ஏற்கனவே தோல்வி அடைந்த, 10 பாடங்கள் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பிரச்னை குறித்து, மாணவர்கள் தரப்பில், உயர்கல்வி துறைக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், நடவடிக்கை எடுக்கப்படாததால், லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பினர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறை ரகசிய விசாரணை நடத்தியதில், மறுமதிப்பீட்டில், மாணவர்கள் தேர்ச்சி பெற தலா, 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த வகையில், கூடுதல் மதிப்பெண் வழங்க, கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழல், அண்ணா பல்கலையின் மறுமதிப்பீடு தேர்வு மையம் அமைக்கப்பட்ட, திண்டிவனத்தில் உள்ள பல்கலையின் உறுப்பு கல்லுாரியில் நடந்துள்ளது. இதற்கு மூளையாக, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக, அப்போது பதவி வகித்த உமா; திண்டினம் கல்லுாரியின் தேர்வு மைய ஒருங்கிணைப்பாளரும், கல்லுாரி முதல்வராகவும் பொறுப்பிலிருந்த, உதவி பேராசிரியர் விஜயகுமார்; தேர்வு மையத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரும், திண்டிவனம் கல்லுாரி உதவி பேராசிரியருமான சிவகுமார் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு தெரிந்த மாணவர்களை, இடை தரகர்களாக பயன்படுத்தி, வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்இந்த பிரச்னையில், உமா, விஜயகுமார், சிவகுமார் ஆகியோருடன், விடை திருத்த பணியில் ஈடுபட்ட, ஏழு பேராசிரியர்கள் மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, உயர்கல்வித்துறையில் இருந்து முதலில் புகார் வராததால்,லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி., மீனா புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உமாவின் வீடு, திண்டிவனத்திலுள்ள பேராசிரியர்கள், விஜயகுமார், சிவகுமார் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலை துணைவேந்தர், எம்.கே.சுரப்பாவும் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து, தற்போது, பேராசிரியராக பணியாற்றி வரும், உமா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், திண்டிவனம் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி முதல்வர் பதவியிலிருந்து விஜயகுமார் நீக்கப்பட்டார். அத்துடன், அவரும், சிவகுமாரும், பேராசிரியர் பொறுப்பில் இருந்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கான, விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம், அரசியல் வட்டாரத்திலும், கல்வித்துறை வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'விடை திருத்த முறையில் மாற்றம்' :
இந்த பிரச்னை குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா அளித்த பேட்டி: விடை திருத்த முறைகேட்டில், போலீசார் வழக்கு பதிவு செய்ததை, நாளிதழ் செய்திகளை பார்த்தே தெரிந்து கொண்டேன். எங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் அணுகவில்லை.போலீசாரின் சுதந்திரமான விசாரணைக்கு, நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம். முறைகேடு நடந்திருக்கும் காலத்தில், நான் துணைவேந்தராக இல்லை. அப்போதைய நிர்வாகத்திற்கு விபரம் தெரியலாம். விடைத்தாள் திருத்த மோசடி குறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, வெங்கடேசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதில், மூத்த அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் உள்ளனர். விசாரணையில், விடைத்தாள் திருத்த முறைகேட்டை நிரூபிக்கும் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, யார் தவறு செய்திருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம். மேலும், தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்த நடைமுறையில், பல்வேறு மாற்றங்களையும் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கில் சிக்கியவர்கள் யார்; யார்?
1. உமா - பேராசிரியர், தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அண்ணா பல்கலை சென்னை. முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி.2. பி.விஜயகுமார், உதவி பேராசிரியர், கம்யூ., சயின்ஸ், - திண்டினம் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி, திண்டிவனம் தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர். 3. சிவகுமார் - உதவி பேராசிரியர், திண்டிவனம் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி மற்றும் தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர். விடை திருத்திய உதவி பேராசிரியர்கள்4. சுந்தராஜன் - எம்.பி.ஆர்., இன்ஜி., கல்லுாரி5. எம்.மகேஷ் - எஸ்.கே.பி.இன்ஜி., கல்லுாரி6. அன்பு செல்வம் - எஸ்.கே.பி., இன்ஜி., கல்லுாரி7. பிரகதீஸ்வரர், - அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, அண்ணா பல்கலை8. ரமேஷ் கண்ணன் - சேலம் தொழில்நுட்ப கல்லுாரி9. பிரதீபா, 10. ரமேஷ். இவர்கள் இருவரும் எந்த கல்லுாரியைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
Comments