பிரியாணி கடை ஊழியர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்

பிரியாணி கடை,ஊழியர்களுக்கு,ஸ்டாலின்,ஆறுதல்சென்னை : விருகம்பாக்கத்தில், தி.மு.க.,வினர் தாக்கிய, பிரியாணி கடை ஊழியர்களை, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை, விருகம்பாக்கம் - ஆற்காடு சாலையில், தமிழ்செல்வன், 50, என்பவருக்கு சொந்தமான, பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், ஜூலை, 29ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, தி.மு.க., வைச் சேர்ந்த, 11 பேர், 'ஓசி' பிரியாணி வாங்க சென்றனர். கடை ஊழியர்கள், 'வியாபாரம் முடிந்து விட்டது; கடையை மூடிவிட்டோம்' என்றனர். இதனால் ஆத்திரம்அடைந்த, தி.மு.க.,வினர், கடை ஊழியர்களை, குத்துச்சண்டை பாணியில் தாக்கினர்.

இதில், கடை உரிமையாளரின் தம்பி மற்றும் ஊழியர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அந்த கடையில், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கிய காட்சி, 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, தி.மு.க.,வின் மானத்தை, காற்றில் பறக்கவிட்டது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டோர், கட்சியில் இருந்து, நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட, யுவராஜ் என்பவர் உள்ளிட்ட, 11 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட, ஓட்டல் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊழியர்கள், சென்னையில் உள்ள, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு, நேற்று அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம், ஸ்டாலின் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். பின், அவர்களுடன் தாக்குதலுக்கு உள்ளான ஓட்டலுக்கு, ஸ்டாலின் சென்றார். அங்கு, ஊழியர்கள் தாக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.

ஓட்டல் உரிமையாளரிடம், 'பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு, நிவாரண உதவி வேண்டுமானால் கேளுங்கள்; தருகிறோம்' என, ஸ்டாலின் தெரிவித்தார். வியாபாரி மற்றும் பொதுமக்களுக்கு, இடையூறு செய்யும், கட்சி நிர்வாகிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

ஏழு பேர் கைது :

பிரியாணி கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில், ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். தாக்குதலில் ஈடுபட்டோர் மீது, விருகம்பாக்கம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், சாலிகிராமத்தைச் சேர்ந்த, ராம் கிஷோர், 23, உள்ளிட்ட, ஏழு பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, யுவராஜ், திவாகரன் என்பவர்களை தேடி வருகின்றனர்.

Comments