அப்பல்லோவில் ஆய்வு ஆக., 6ல் அறிக்கை தாக்கல்

அப்பல்லோவில் ஆய்வு: ஆக., 6ல் அறிக்கை தாக்கல்சென்னை: சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., இருந்த அறைகளில் ஆய்வு நடத்திய, ஆறுமுகசாமி கமிஷன் வழக்கறிஞர்கள், வரும், 6ம் தேதி, அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். 

ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்ஸ்கள், ஜெ., உறவினர்கள், சசிகலா உறவினர்கள் என, 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய தகவல்களின் உண்மை தன்மையை அறிவதற்காக, அப்பல்லோ

மருத்துவமனையில், ஜெ., தங்கி சிகிச்சை பெற்ற அறையில், ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதற்கு அனுமதி கோரி, கமிஷன் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ஆய்வுக்கு அனுமதி அளித்தார். அவர்களுடன் கமிஷன் செயலர், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் செல்லவும்,அனுமதி அளிக்கப்பட்டது. ஜெ., அண்ணன் மகள் தீபா, தன் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியுடன், தனியே சென்று பார்வையிடவும், நீதிபதி அனுமதி வழங்கினார். கமிஷன் செயலர் கோமளா, வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன், சசி தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்துார் பாண்டியன் ஆகியோர், ஜூலை, 29ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, ஜெ., அனுமதிக்கப்பட்டிருந்த அறை, சசிகலா தங்கியிருந்த அறை, அமைச்சர்கள் காத்திருந்த அறை, டாக்டர்கள் ஆலோசனை செய்த அறை என, அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டனர். 

இது தொடர்பான அறிக்கையை, கமிஷன் வழக்கறிஞர்கள் சார்பில், செயலர் கோமளா, வரும், 6ல், கமிஷனில் தாக்கல் செய்ய உள்ளனர்.

டாக்டர்களுக்கு, 'சம்மன்' :

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அலுவலகம் அமைந்துள்ள, சென்னை, கல்சா மஹாலில், மராமத்து பணிகள் நடந்ததால், இந்த வாரம் விசாரணை நடைபெறவில்லை. மீண்டும் வரும், 6ல், விசாரணை துவங்க உள்ளது. அன்று, அப்பல்லோ டாக்டர் பழனிசாமி, நர்ஸ் அனுஷா ஆகியோர், விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. வரும், 7ல், அப்பல்லோ டாக்டர்கள் அர்ச்சனா, பிரசன்னா, நர்ஸ்கள் ரேணுகா, ஷீலா ஆகியோரிடம், குறுக்கு விசாரணை நடக்க உள்ளது. 8ல், அப்பல்லோ நரம்பியல் டாக்டர் அருள்செல்வன், கதிரியக்க டாக்டர் ரவிக்குமார்; 9ல், மயக்கவியல் டாக்டர் பாஸ்கர் ஆகியோர் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.

Comments