சேலம் - சென்னை எட்டுவழி பசுமை சாலை திட்டத்துக்கு, நிலம் அளவீடு செய்யும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று காலை, சேலம் மாவட்டம், பாரப்பட்டி, பூலாவரி, புஞ்சைக்காடு பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த் துறையினர், நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
புஞ்சைக்காட்டில், சக்திவேல் என்பவரது, 4 ஏக்கர் தோட்டம் மற்றும் பாதிக்கும் மேல் புதிதாக கட்டிய வீடு ஆகியவற்றை அளந்து, முட்டுக்கல் நட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக்திவேல் மனைவி செல்வி, 50, தரையில் புரண்டு அழுதபடி, 'என்னை கொன்றுவிட்டு, வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்' என, கதறினார். சக்திவேல், 60, தன் நிலத்தில் நட்டிருந்த முட்டுக் கற்களை, கைகளால் எடுத்து துாக்கி போட்டார்.
சக்திவேல் கூறுகையில், ''நிலங்களை அளப்பதற்கு முன், நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஜூலை, 13ல் கலெக்டர் அலுவலகத்தில், இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில், கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஏராளமான போலீசாரை வைத்து, பயமுறுத்தி நிலத்தை அபகரிப்பு செய்கின்றனர்,'' என்றார்.
தொடர்ந்து பூலாவரி, உத்தமசோழபுரம் பகுதிகளில் நிலம் அளந்து, முட்டுக்கல் போடும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
வதந்தி பரப்பியவர் கைது
சேலம் மாவட்டத்தில், எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளவிடும் பணிகளை தடுக்க முயற்சித்த விவசாயியை, போலீசார் சுட்டுக் கொன்று விட்டதாக, சமூக வலைதளங்களில், தகவல்கள் பரவின.
விசாரணை நடத்திய போலீசார், கேரளாவில், யானை மிதித்ததில் பலியான பாகனின் உடலை வைத்து, சிலர் வதந்தி பரப்பியதை கண்டறிந்தனர். வழக்குப்பதிவு செய்த மல்லுார் போலீசார், வதந்தி பரப்பியதாக, சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ், 43, என்பவரை கைது செய்தனர். அவருக்கு, தவறான தகவல்களை பரிமாற்றம் செய்த, நான்கு பேர் குறித்தும், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments