தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க.,வில் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்பட்டன. தினகரன் ஆதரவு எம்.எல்.,க்கள் 18 பேர் முதல்வர் பழனிசாமியை மாற்றும்படி கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 'சபாநாயகர் எடுத்த முடிவு சரியானதே; இதில் நீதிமன்றம் தலையிட முடியாது' என தீர்ப்பளித்தார்.
மற்றொரு நீதிபதியான சுந்தர், 'சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது; எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது' எனதீர்ப்பளித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு மூன்றாவது நீதிபதியிடம் விடப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர 17 பேர் சார்பிலும் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு விடப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வழக்கில் முதல்வர், துணை முதல்வர் போன்ற செல்வாக்கு பெற்ற நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இதன் விசாரணை தமிழகத்தில் நடந்தால் நேர்மையாக நடக்காது.
மூன்றாவது நீதிபதி அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தால் அதன் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தான் நடக்கும்; இதனால் வழக்கில் மேலும் தாமதம் ஏற்படும். உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவது இது தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும்.
எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் ஆகியோர் நேற்று பரிசீலித்தனர். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறியதாவது: வழக்கின் விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் இதில் தீர்வு ஏற்படுவது மேலும் தாமதமாகும். 17 தொகுதிகளுக்கும் புதிதாக தேர்தல் நடத்துவதும் தாமதம் ஆகும். எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்.மூன்றாவது நீதிபதியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன் 'வாட்ஸ் ஆப்'பில் அது பற்றிய தகவல்கள் வெளியாகி விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: வாட்ஸ் ஆப் விவகாரத்தை நாங்கள் கவனத்தில் எடுக்கப் போவது இல்லை. இந்த வழக்கை வரும் 27ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தமிழக அரசியலில் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி தி.மு.க.,வினர் மனு தாக்கல் செய்ததை அடுத்து அந்த வழக்கு கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. அதேபோல் 17 எம்.எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments