பெங்களூர்: இன்று இரவு ஆளுநர் எப்போது வேண்டுமானாலும், பாஜக அல்லது, காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு அழைப்புவிடுப்பார் என்று கூறப்படுகிறது. 118 எம்எல்ஏக்கள் பலம் தங்களுக்கு உள்ளதாக காங்கிரஸ்-மஜத தலைவர்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம் அளித்து, தங்களை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்துள்ளனர்.
முன்னதாக, பாஜக சார்பில் எடியூரப்பா, தங்கள் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், தங்களையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினார். இந்த இரு கோரிக்கைகளையும் பெற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தால் குமாரசாமியும், பாஜகவுக்கு அழைப்புவிடுத்தால் எடியூரப்பாவும் முதல்வராக பதவியேற்பார்கள். இதனிடையே நாளை ராஜ்பவனில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பதவியேற்க பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஒரு சில அமைச்சர்களுடன் எடியூரப்பா பதவியேற்க திட்டமிட்டுள்ளாராம். இன்று இரவுக்குள் ஆளுநர் ஏதாவது ஒரு தரப்பை ஆட்சியமைக்க அழைப்புவிடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பதவி பிரமாணம் விழா நடைபெறலாம் என்பதால், தயாராக இருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அலுவலகத்திற்கு ராஜ்பவனில் இருந்து இன்று மாலை தகவல் பரிமாறப்பட்டுள்ளதாம். ஒருவேளை பாஜகவை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தால் ராஜ்பவன் எதிரே தர்ணா நடத்த காங்கிரஸ்-மஜத கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு கர்நாடக அரசியலில் நிலவுகிறது.
Comments