எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது.... விடிய விடிய நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

congress approaches supreme court டெல்லி: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரியுள்ளது. அதையடுத்து அதிகாலை 1.45 மணிக்கு துவங்கி, 2.30 மணிநேரம் நடந்த வாதத்தைத் தொடர்ந்து, எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. பெரும்பான்மை பலம் உள்ள தங்களை தவிர்த்து, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் ரவிந்திர் மைதானி மற்றும் பதிவாளர்கள் நள்ளிரவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். இன்று காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், எடியூரப்பாவை பதவி ஏற்கும்படி ஆளுநர் விடுத்துள்ள அழைப்புக்கு தடை கோரப்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் அவகாசம் விடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவை குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்தார். அதையடுத்து அதிகாலை 1.45க்கு இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஏகே சிக்ரி, எஸ்ஏ பாப்டே, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் அகிஷேக் மனு சிங்கி ஆஜரானார். கர்நாடக ஆளுநருக்கு ஆலோசனை வழங்கிய முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி பாஜக சார்பில் ஆஜரானார். முதலில் காங்கிரஸ், மஜத சார்பில் வழக்கறிஞர் தேவ் தத் காமர் வாதிட்டார். 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் அளித்தபோதும், 104 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது தவறு என்று அவர் வாதிட்டார். ஆளுநர் எடுத்த முடிவு சரிதான் என்று பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி வாதிட்டார். பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று எப்படி எண்களின் மூலம் முடிவு செய்ய முடியும். சட்டசபையில்தான் அது நிரூபிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். 117 பேரின் ஆதரவு உள்ளதாக குமாரசாமி ஆதாரம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, அதை நிராகரித்தது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். 104 பேரின் ஆதரவு உள்ளவர், 113 பேரின் ஆதரவைப் பெற வேண்டுமானால், மற்றக் கட்சியினரின் ஆதரவைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை. இது குதிரை பேரம் செய்வதற்கு ஆளுநர் வாய்ப்பு அளித்ததாக உள்ளது என்று அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

கவர்னரின் முடிவுகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது என்று முகுல் ரோஹத்கி வாதிட்டார். அதையடுத்து கவர்னரின் அதிகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அமர்வு, பாஜக சார்பில் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் இல்லாமல் எப்படி முடிவு எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியது. அதிகாலை 4.30 மணி வரை கிட்டத்தட்ட, 3 மணி நேரம் கடும் வாதம் நடந்தது. அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது. அதே நேரத்தில், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உள்ளதாக கூறிய அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Comments