நிராகரிப்பு
காவிரி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது.
விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில், காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.
அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவுக்கு பதில் டில்லியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இரண்டு கோரிக்கைகளையும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நிராகரித்து விட்டது.
கோரிக்கை:
கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தில் நிலையான அரசு இல்லாததால், விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதனை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
ஆட்சேபனையில்லை:
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி அமைப்பிற்கு வாரியம் என்ற பெயர் வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்றார். இதற்கு கர்நாடக அரசும் ஒப்பு கொண்டது.
ஒத்திவைப்பு
இதனையடுத்து, இரு மாநில அரசுகளின் கருத்துகள் தொடர்பாக, நாளை பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (மே 17) ஒத்திவைத்தனர். மேலும் வாரியத்தின் அனுமதியின்றி தமிழகமோ, கர்நாடகவோ எந்த அணையும் கட்ட முடியாது. காவிரி அமைப்பின் முடிவே இறுதியானது. நீர் பங்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவே இறுதியானது என்ற அம்சத்தை காவிரி வரைவு அறிக்கையில் இருந்து நீக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமைப்பின் பெயர், அணை கட்டும் அனுமதி, அதிகாரம் ஆகிய 3 அம்சங்களை திருத்திய இறுதி வரைவு அறிக்கையை நாளை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரச்னை ஏற்பட்டால் இறுதி முடிவை மத்திய அரசை எடுக்கும் என்பதை ஏற்க முடியாது எனவும், காவிரி வாரியம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Comments