கர்நாடகாவில் குதிரை பேரம் துவங்கியது.... காங்கிரஸ் லிங்காயத் எம்எல்ஏக்களுக்கு பாஜக குறி

horse trading started in karnataka.
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியை பிடிக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லிங்காயத் இனத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சி செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் தேர்தல் நடந்தது. அதன்படி பெரும்பான்மைக்கு 112 பேரின் ஆதரவு தேவை.
பாஜக 104 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றுள்ளது. 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வென்றுள்ளனர். காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி, இவ்விரு கட்சிகளுக்கு மொத்தமாக 116 பேரின் ஆதரவு உள்ளது. மேலும் 2 சுயேச்சைகளும் ஆதரவு அளித்துள்ளனர். அதன்படி 118 பேரின் ஆதரவு உள்ளது. ஆட்சியை அமைக்க உரிமை கோரி பாஜகவின் சார்பில் எடியூரப்பாவும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் குமாரசாமியும் ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளனர். இந்த நிலையில், பெரும்பான்மை பலத்தை பிடிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லிங்காயத் இனத்தைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்களுக்கு பாஜக வலைவிரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். தேர்தலுக்கு முன்னதாக, லிங்காயத் இனத்தை தனி மதமாக, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆனால், சட்டசபை தேர்தலில் லிங்காயத்துகளின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், லிங்காயத் இனத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குமாரசாமியை முதல்வராக ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

Comments