கடிதம் தாக்கல்
எடியூரப்பா பதவியேற்றதை எதிர்ப்பு காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது பா.ஜ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ஆட்சியமைக்க உரிமை கோரி மே 15 மற்றும் 16 ம் தேதிகளில் கவர்னரிடம் எடியூரப்பா அளித்த கடிதங்களை தாக்கல் செய்தார்.அதில், பெரும்பான்மை அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ரோத்தஹி வாதாடுகையில், காங்கிரஸ் மஜத எம்எல்ஏ.,க்கள் மிரட்டி, சிறைபிடித்து வைத்துள்ளனர். சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடிதங்களில் எம்எல்ஏக்கள் கையெழுத்து குறித்து கவலைபட தேவையில்லை. காங்கிரஸ் அளித்த கடிதத்திலும், சிலரது கையெழுத்துகள் இடம்பெறவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிடலாம். காங்., மஜத எம்எல்ஏக்கள் சிலர் எடியூரப்பாவிற்கு ஆதரவு அளிக்கலாம் என்ற அவர் எம்எல்ஏக்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.
கேள்வி
தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தங்களுக்கு ஆதரவு உள்ளதாக கூறிய நிலையில் பா.ஜ.,வை மட்டும் அழைத்தது ஏன்? யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பது குறித்து கவர்னர் முடிவு செய்யலாம். வாக்காளர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் கூட்டணி குறித்து மக்களுக்கு தெரியாது. தற்போதைய சூழலில், கவர்னர் முடிவு குறித்து விரிவாக விசாரணை நடத்துவது அல்லது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், கர்நாடக சட்டசபையில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது சரியாக இருக்கும். நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த எடியூரப்பா தயாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர எங்களுக்கு தான் முதலில் வாய்ப்பு தர வேண்டும் என்றார்.
Comments