பரபர தகவல்கள்.. கர்நாடக முதல்வராக நாளை பதவியேற்கிறார் எடியூரப்பா?

மூடி மறைக்க முடியாது பெங்களூர்: கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா நாளை பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்கள் பலம் தேவை என்ற நிலையில், 78 தொகுதிகளை வென்ற காங்கிரசும், 38 தொகுதிகளை வென்ற மஜதவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்து ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்துள்ளன. முன்னதாக பாஜகவும் தங்களை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்குமாறு கோரியது.

ஆளுநருடன் சந்திப்பு இந்த நிலையில் இன்று ராணிபென்னூர் தொகுதி எம்எல்ஏ சங்கர் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். மொத்தம் 105 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறியுள்ள எடியூரப்பா அதற்கான கடிதத்தை இன்று ஆளுநரிடம் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்புவிடுக்குமாறு, ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்தேன். கூடிய விரைவில் எங்கள் கோரிக்கை மீது முடிவெடுக்க கோரினேன் என்றார்.

ரொம்ப ஹேப்பி ஆளுநரை சந்தித்த பிறகு எடியூரப்பா முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ரொம்பவே ரிலாக்சாக காணப்பட்டார். தேர்தல் முடிவு வெளியான நேற்று டென்ஷனாக காணப்பட்ட எடியூரப்பா முகத்தில் இன்று புன்னகை ததும்பியது.

ஆளுநர் அறிவிப்பா? இதனிடையே இன்று மாலைக்குள், பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார் என்றும், இந்த தகவல் தெரிந்தே எடியூரப்பா மகிழ்ச்சியாக காணப்படுகிறார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, நாளையே எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூடி மறைக்க முடியாது இதுகுறித்து எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தால் உங்களுக்கே தெரியும். ஆறரை கோடி மக்களுக்கும் தெரியாமல் இதை மூடி வைக்க முடியாது என நிருபர்களுக்கு எடியூரப்பா பதில் அளித்தார். இந்த தகவல் கர்நாடக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பே அறிவித்த எடியூரப்பா தேர்தல் நடைபெறும் முன்பே மே 17ம் தேதி நான் முதல்வராக பதவியேற்பேன் என்று எடியூரப்பா அறிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கும் அழைப்புவிடுத்துள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்தத நிலையில், அவர் கூறியபடியே நிலைமை மாறிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments