மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, தகவல் உரிமை ஆர்வலர், அனில் கல்காலி கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில், அனைத்து ஊடகங்களிலும், விளம்பரங்களுக்காக, மத்திய அரசு செய்துள்ள செலவு விபரத்தை, பி.ஓ.சி., எனப்படும், மத்திய அரசின், சேவை வழங்குதல் மற்றும் தகவல் மையத்திடம், தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்றேன்.
மத்திய அரசு, 2014, ஜூன் முதல், விளம்பரங்களுக்காக, 4,343 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளது. இதுதொடர்பாக, பரவலான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, 2017ல், வழக்கத்தை விட, 308 கோடி ரூபாய் குறைவாக, விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
கடந்த, 2014, ஜூன் முதல், 2015, மார்ச் வரையிலான காலத்தில், விளம்பரங்களுக்காக, 953 கோடி ரூபாயை, மத்திய அரசு செலவு செய்துள்ளது. 2015 - 16 நிதியாண்டில் இத் தொகை, 1,171 கோடி ரூபாயாக அதிகரித்தது; இது, 2016 - 17 நிதியாண்டில், 1,263 கோடி ரூபாயாக உயர்ந்தது.
கடந்த, 2017, ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில், மத்திய அரசு, விளம்பரங்களுக்காக, 955 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. தேவையான விஷயங்களுக்கு, மத்திய அரசு விளம்பரங்கள் செய்வதில் தவறில்லை. அதேசமயம், கட்டுப்பாடற்ற முறையில் விளம்பரங்களுக்காக செலவு செய்வது தடுக்கப்பட வேண்டும். இத்தகைய செலவுகள் குறித்து, மத்திய அரசின் இணையதளங்களில், தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments