பெங்களூர்: கர்நாடகா முதல்வராக நாளை காலை பதவியேற்கும் பாஜகவின் எடியூரப்பா, தனது பெரும்பான்மையை நிரூபிக்க மே 27ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர். 11 நாட்கள் அவகாசம் உள்ளது குதிரை பேரத்துக்கு வழிவகுத்து விடும் வாய்ப்பு உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. அதனால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரியது.
பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏக்கள் பலம் தேவை என்ற நிலையில், 78 தொகுதிகளை வென்ற காங்கிரசும், 38 தொகுதிகளை வென்ற மஜதவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்து ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக இரு தரப்பும் ஆளுநரை தலா இரண்டு முறை சந்தித்தன. இந்த நிலையில் மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோஹத்கியிடம் சட்ட ஆலோசனைகளை கேட்டார் கர்நாடகா கவர்னர் வாஜூபாய் வாலா. பதவியேற்கும்படி எடியூரப்பாவுக்கு இன்று இரவு அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு வரும் 27ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர். கிட்டத்தட்ட 11 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குதிரை பேரத்துக்கு வழியை ஏற்படுத்திவிடும். பாஜகவுக்கு சாதகமாகவே ஆளுநரின் முடிவுகள் உள்ளதாக எதிர்க்கட்சிகளும், சட்ட நிபுணர்களும் கூறுகின்றனர்.
Comments