மகிழ்ச்சியில்லை
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, என்னை சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்த கட்சியினருக்கு நன்றி. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எங்கள் கட்சியின் ஓட்டுக்கள் பிரிந்ததாலேயே பா.ஜ.,வால் 104 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.
அவசியமான ஒன்று
மஜத கட்சியை உடைக்க பா.ஜ., தீவிர முயற்சி செய்து வருகிறது. போதிய எண்ணிக்கை இல்லாததால் எடியூரப்பாவால் ஆட்சி அமைக்க முடியாது. மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அவசியமான ஒன்று. இந்த கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்காக இல்லை. நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை உதறி விட்டு வந்தது எங்கள் குடும்பம். மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமல் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.
குதிரை பேரம்
ரூ.100 கோடி தருகிறேன். அமைச்சர் பதவி தருகிறேன் என எங்கள் எம்எல்ஏ.,க்களுக்கு பா.ஜ., ஆசை காட்டி, பேரம் பேசி வருகிறது. இந்த கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? குதிரை பேரத்தில் பா.ஜ., ஈடுபட்டு வரும் நிலையில் வருமான வரித்துறை என்ன செய்கிறது. பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்தி வருகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்., உடன் மட்டும் தான் கூட்டணி. மஜத எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பார்க்கிறது. எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவை தூக்கினால், பா.ஜ., எம்எல்ஏக்கள் 4 மடங்கு பேரை நாங்கள் இழுப்போம். கவர்னர் எங்களுக்கு சாதகமாக முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Comments